சிறீலங்காவிலும், இந்தியப் பெருங்கடலிலும் இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகளை ஆபத்துக்குள்ளாக்கக்கூடாது– சரத் பொன்சேகா

223 0

Fonsekaசிறீலங்காவிலும், இந்தியப் பெருங்கடலிலும் இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகளை ஆபத்துக்குள்ளாக்கக்கூடாது என்று சிறீலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெறும் இரண்டாவது ரைசினா கலந்துரையாடலில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சரத் பொன்சேகா ஏஎன்ஐ செய்திச் சேவைக்கு கருத்து வெளியிடுகையில்,

“இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியலை ஆபத்துக்குள்ளாக்கக் கூடாது. இந்தியா ஒரு பிராந்திய சக்தி. முக்கியமான வல்லரசு.பாதுகாப்பு விவகாரங்கள் என்று வரும் போது, இந்தியா  இந்தப் பகுதியின் பிராந்திய சக்தியாக விளங்குகிறது.

இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகளையும், உணர்வுகளையும், ஆபத்துக்குள்ளாக்க முடியாது. சிறிலங்கா இதனை உணர்ந்துள்ளது.எனவே, ஏனைய நாடுகளுடன் சிறிலங்கா இணக்கப்பாடுகளை எட்டும் போது, இந்தியாவை இக்கட்டான நிலைக்குள் இட்டுச் செல்ல வேண்டாம் என்று உறுதிப்படுத்த வேண்டும்.

இந்தியா பிராந்திய சக்தியாகவும், முக்கியமான வல்லரசாகவும் இருக்கிறது. எனவே, உலகின் ஏனைய சக்திவாய்ந்த நாடுகள் இந்தப் பகுதிக்கு நகரும் போது, இந்தியா தனது பாதுகாப்புக் குறித்து மிகவும் கரிசனை கொள்ளும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.அம்பாந்தோட்டை விடயத்தில் ஒரு விசித்திரமான நிலை உள்ளது.  அந்த திட்டங்களினால் எமது நாடு சீனாவுக்கு மிக மோசமான கடனாளியாகி விட்டது. அந்த திட்டங்களால் நாட்டுக்கு நன்மை கிடைக்கவில்லை. ஏனென்றால் அதில் நிறைய ஊழல்கள் இடம்பெற்று விட்டன.

எமது பக்கத்தில் சீனாவுடன் உடன்பாடு செய்தவர்கள், தமது பணியை உண்மையுடன் செய்யவில்லை. பெருமளவு பணம் விளையாடிவிட்டது. இதனால் தேசிய நெருக்கடி எமக்கு ஏற்பட்டது.எல்லா நாடுகளுடனும் நட்புறவை பேணிக்கொள்வதே சிறிலங்காவின் எண்ணம்.  நாம் ஒரு சிறிய நாடு, வரலாற்று ரீதியாக எல்லா நாடுகளுடனும் சுமுகமான உறவுகளை பேணி வந்திருக்கிறோம். பெரிய நாடுகள் எமது நிலைமை புரிந்து கொள்ள வேண்டும். ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.