நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியுடனான காலநிலையினால் வட மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது-இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்(காணொளி)

321 0

mullai pajirநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினால் 42 ஆயிரத்து 5 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியுடனான காலநிலையினால் வட மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வறட்சி காரணமாக 24 ஆயிரத்து 324 குடும்பங்களைச் சேர்ந்த 85 ஆயிரத்து 461 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் 13 பகுதிகளில் கடும் வறட்சியுடனான வானிலை நிலவுவதாகவும் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதையடுத்து, மன்னார் மாவட்டத்திலேயே அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, மன்னார் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 235 குடும்பங்களைச் சேர்ந்த 34 ஆயிரத்து 765 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் ஐந்து பகுதிகள் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஹம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா மாவட்டங்களும் வறட்சியினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதன்படி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மூவாயிரத்து 578 குடும்பங்களைச் சேர்ந்த 14 ஆயிரத்து 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் இரண்டாயிரத்து 107 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 647 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கடும் வறட்சியுடனான காலநிலையால் புத்தளம் மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் வண்ணாத்திவில்லு, கருவலகஸ்வெவ, நவகத்தேகம, ஆணமடு, முந்தல், மகாகும்புக்கடவல மற்றும் ஆராய்ச்சிக்கட்டு ஆகிய பகுதிகள் கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஏற்பட்டுள்ள வறட்சியுடனான வானிலையினால் வேளாண்மை செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், பதுளை, மொனராகலை, அநுராதபுரம், கண்டி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களும் வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.