போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் நேர்மையான விசாரணை -மங்கள சமரவீர

269 0

521206872mangalaaபோர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுதந்திரமானதும், நேர்மையானதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருப்பதாக லண்டனில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த 9 ஆம் திகதி இங்கிலாந்துக்கான விஜயத்தை மேற்கொண்டார்.

இந்த நிலையில், லண்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனை அவர் கூறியுள்ளார்.

கடந்த 2009மே மாதம் யுத்தம் நிறைவடைந்துவிட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம், மறுசீரமைப்பு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு, பொருளாதார இலக்குகளை அடைதல் மற்றும் அபிவிருத்தி, மீளிடம்பெறாமையை உறுதிப்படுத்தல் போன்ற இலக்குகள் இன்னும் நாட்டுக்கு சவாலான விடயங்களாகவே இருக்கின்றதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், இவற்றை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, போர்க்குற்ற விசாரணைகளுக்கான பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவது தொடர்பில் அரசாங்கத்தினால் வெள்வேறு நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்படுகின்றன.எனினும் இந்த விசாரணைகள் நேர்மையானதாகவும், சுயாதீனமானதாகவும் அமைய வேண்டும் என்பதில் அரசாங்கம் தெளிவாக இருக்கிறது. ஜனநாயகமும், இறைமையும் கொண்ட அரசாங்கம் என்ற அடிப்படையில், இதற்கான பொறிமுறை தொடர்பில் பல்வேறு தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானங்கள் செயற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.