ஆண்டுதோறும் தகுதி தேர்வு நடத்தி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

262 0

201701121112188464_Ramadoss-report-should-passed-lokayukta-legislation_SECVPFஆண்டுதோறும் தகுதி தேர்வு நடத்தி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30,000 பேர் இருப்பதால் ஆசிரியர் தகுதித் தேர்வு இப்போதைக்கு நடத்தப்படாது என்று பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டிய ராஜன் கூறியுள்ளார். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்கள் ஏற்கனவே தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இது கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானதாகும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் புதிதாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த தேவையில்லை என்பது கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளாமல் தெரிவிக்கப்பட்ட கருத்து ஆகும். ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது தனியார் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வது போன்று, பணியிடங்கள் காலியாக இருந்தால் மட்டும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அல்ல. மாறாக, காலியிடங்களின் எண்ணிக்கையை பொருட்படுத்தாமல், குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருமுறை தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டிய தகுதி வழங்கும் நடவடிக்கை ஆகும்.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி தகுதித் தேர்வு நடத்துவது குறித்து 15.11.2011 அன்று தமிழக அரசு பிறப்பித்த 181-ஆவது அரசாணையின் பிறசேர்க்கை 11 ஆவது பிரிவில், ‘‘ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு முறையாவது தகுதித் தேர்வை அரசு நடத்த வேண்டும். இதில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை 7 ஆண்டுகளுக்கு மிகாமல் அரசு நிர்ணயித்துக் கொள்ளலாம். அத்துடன் தகுதித் தேர்வு மதிப்பெண்ணை உயர்த்திக் கொள்வதற்காக மீண்டும் மீண்டும் தேர்வை எழுதலாம்’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்பிரிவை அமைச்சர் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த விதிகளின்படி மத்திய அரசால் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை ஜூன் மாதத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றாலும், அதைக் கருத்தில் கொள்ளாமல் ஆண்டு தோறும் தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கான மாநில அளவிலான தகுதித் தேர்வு (எஸ்.இ.டி) ஆண்டுக்கு ஒரு முறையும், தேசிய தகுதித் தேர்வு(என்.இ.டி) ஆண்டுக்கு இருமுறையும் நடத்தப்படுகின்றன.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30,000 பேர் இன்னும் வேலை பெறாமல் இருக்கின்றனர் என்பதே அரசின் தோல்வியைக் காட்டுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டுமானது அல்ல. சிறுபான்மை பள்ளிகள் தவிர மற்ற தனியார் சுயநிதி பள்ளி ஆசிரியர்களுக்கும் இந்த தகுதித் தேர்வு பொருந்தும்.

2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு பிறப்பித்த 181-ஆவது அரசாணையின் மூன்றாவது பிரிவில், ‘‘அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்’’ என கூறப்பட்டிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் பல லட்சம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தகுதித் தேர்வின் அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டிருந்தால், இந்த 30,000 பேருக்கும் எப்போதோ வேலை கிடைத்திருந்திருக்கும்.

ஆசிரியர் தகுதித் தேர்வுகள் கூடாது. வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடும், விருப்பமும் ஆகும். ஆனால், தகுதித் தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த விதிகள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று பா.ம.க. கருதுகிறது. எனவே, ஆண்டுக்கு ஒரு முறை தகுதித்தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுவோரைக் கொண்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.