இனம், மதம் பற்றி சிந்திக்காது அனைவரும் ஒன்றிணைந்து ஒரு இனமாக, இலங்கையர்களாக வாழ்வதற்கு உறுதிகொள்வோம்- எ.எச்.எம்.பௌசி

575 0

download-3அனைத்து இனத்தவர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமாக, எதிர்கால சந்ததியினர் எவ்வித அச்சமும், சந்தேகமுமின்றி வாழக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்று, தேசிய ஒன்றிணைப்பு மற்றும் மீள்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் எ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய செயற்கை நத்தார் மரத்தை நான்காம் தடவையாக திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் எ.எச்.எம்.பௌசி,

‘இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் நாம் அனைவரையும் சகோதரர்களாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளார்கள். இன்று பெரும்பாலானவர்கள் சாதி ,மத பேதங்களை தோற்றுவித்து அரசியல் இலாபங்களை ஈட்டிக்கொள்ள முயற்சிக்கின்றார்கள். இதுவோர் தவறான செயலாகும். நாம் அனைவரும் இலங்கையர்களே. எம்மிடம் அரசியல் நிலைப்பாடுகள் காணப்பட வேண்டுமென்ற போதிலும் சமய நிகழ்வுகளின் பொழுது மற்றும் தேசிய நிகழ்வுகளின் பொழுது நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

நாம் மக்களிடம் வேண்டுவது யாதெனில், இனம், மதம் பற்றி சிந்திக்காது அனைவரும் ஒன்றிணைந்து ஒரு இனமாக, இலங்கையர்களாக வாழ்வதற்கு உறுதிகொள்வோம்.

இச்சக்தி எம்மிடம் இருக்குமாயின் எம்முடைய இளம் சந்ததியினர் எவ்வித பிரச்சினைகளுமின்றி வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.” என்று மேலும் குறிப்பிட்டார்.