மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உணவகங்களிற்கு தரம் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது

420 0

batti-phi-28-12-2016மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருவதால் உணவகங்களில் சுகாதாரமான உணவுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் உணவகங்கள் தரம்பிரிக்கப்பட்டு அவற்றுக்கு தரங்களை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் முதல் கட்டமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களுக்கு தரநிர்ணய சான்றிதழ்கள் பொருத்தும் வேலைத்திட்டங்கள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபையும் சுகாதார திணைக்களமும் இணைந்து முன்னெடுக்கும் இந்த திட்டம் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதில் மட்டக்களப்பு மாநகரசபை பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன் உட்பட மாநகரசபை ஊழியர்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு நகரில் உள்ள உணவு விடுதிகளுக்கு நேரடியாக சென்று மாநகர ஆணையாளர் அவற்றினை பொருத்திவைத்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் 68 உணவு கையாளும் நிறுவனங்கள் ஆய்வுசெய்யப்பட்டு ஒன்பது நிறுவனங்களுக்கு சிறந்த உணவகத்திற்குரிய ஏ சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

இவற்றில் இருபது உணவகங்கள் திருப்தி என்ற அடிப்படையில் பி சான்றிதழ் வழங்கப்படுவதுடன் சி தரம்பெற்ற உணவகங்களும் டி தரம்பெற்ற உணவகங்களும் மதிப்பீட்டில் குறைந்த புள்ளிகளைப்பெற்ற நிறுவனங்களாக உள்ளன.

இருந்தபோதிலும் அடுத்தமுறை ஆய்வு மேற்கொள்ளப்படும்போதுதரத்தினை அதிகரிப்பார்களானால் சுகாதார தரங்களை மீள்மதிப்பீடுசெய்து மீளவும் அவர்களுக்கான புள்ளிகளை வழங்ககூடியதாக இருக்கும் என்று மாநகர ஆணையாளர் கூறினார்.

அண்மைக்காலமாக மட்டக்களப்புக்கு அதிகளவில் வருகைதரும் உள்நாட்டு வெளிநாட்டு பிரயாணிகள் இந்த உணவகங்களுக்கே வருகை தருவதாகவும், இந்த உணவகங்களின் தரத்தினை மதிப்பீடுசெய்வதன் ஊடாக பயணிகள் மற்றும் பொதுமக்கள் சுகாதாரமான உணவுகளை பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.