மீண்டும் அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் திருத்தங்களுடன் மாகாண சபைகளில் சமர்ப்பிக்கப்பட்டு,அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானம்

381 0

 

imagesஅபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் திருத்தங்களுடன் மீண்டும் மாகாண சபைகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தின் ஊடாக விசேட அமைச்சர் ஒருவர் உருவாக்கப்படவுள்ளதாகவும், அதனூடாக மாகாண சபை அதிகாரங்கள் சவாலுக்கு உட்படுத்தப்படும் எனவும் தெரிவித்து, மாகாண சபைகள் அந்த சட்டமூலத்தை தோற்கடித்து வருகின்றன.

இந்த சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்துவதற்காக மேல் மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களுடன் நாளை விசேட கலந்துரையாடலொன்றை நடாத்தவுள்ளார்.

இதேவேளை, மத்திய மாகாண சபை இன்று இந்த சட்டமூலத்தை தோற்கடித்துள்ளது.

குறித்த சட்டமூலம் சப்ரகமுவ மற்றும் தென் மாகாண சபைகளில் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன், அந்த சட்டமூலம் மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டிருந்தன.

அத்துடன், வடக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாண சபைகளும் இந்த சட்டமூலத்தை தோற்கடித்திருந்தன.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிகாரங்கள் காணப்படுகின்ற மாகாண சபைகள் இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்கள் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தனர்.

எனினும்;, குறித்த சட்டமூலத்திற்கு ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள், அமைச்சரவையில் அங்கீகாரத்தை வழங்கியிருக்கின்றமையினால், சட்டமூலம் திருத்தங்களுடன் மீண்டும் மாகாண சபைகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்படும் என அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி ஆகியன எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துவதற்கு விசேட அமைச்சர் ஒருவர் தேவையில்லை என கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டிற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.