இந்திய அகதி முகாம்களில்உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தமது தாய்நாட்டிற்கு திரும்புவதா இல்லையா என்று அவர்களே தீர்மானிக்கவேண்டும் என்று இந்திய போக்குவரத்து கடல் நடவடிக்கை துறை இராஜாங்க அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு அருகிலுள்ள கும்மிடிப்பூண்டி முகாமிற்கு விஜயம் செய்த இந்திய போக்குவரத்து கடல் நடவடிக்கை துறை இராஜாங்க அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், அங்குள்ள நிலமைகளை கண்டறிந்தார்.
நேற்று அங்கு விஜயம் செய்த பின்னர் த இந்து பத்திரிக்கைக்கு கருந்து தெரிவித்த பொன்.இராதாகிருஷ்ணன், அகதிகள் இங்கு தங்கியிருக்க விரும்பும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படும் என்று கூறினார்.
இந்தியாவில் சுமார் ஒரு இலட்சம் அகதிகள் தங்கியிருக்கின்றனர்.
இவர்களுள் 36 ஆயிரம் பேர் அகதிமுகாம்களுக்கு வெளியே வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுள் 5266 அகதிகள் இலங்கைக்கு மீண்டும் திரும்பியிருப்பதாக புனர்வாழ்வு சிறைச்சாலை மறுசீரமைப்பு இந்த அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நலன் தொடர்பான பிரிவு இவர்களுக்கான பயண வசதிகளுக்கு உதவி வருகின்றது.
இவர்களை மீளக்குடியமர்த்துவதில் புனர்வாழ்வு அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.
இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையிலான கப்பல் சேவை தொடர்பாக அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் அகதிகளுக்காகவும் யாத்திரிகளுக்காகவும் இந்த சேவையை பயன்படுத்த முடியும் என்று இந்திய போக்குவரத்து கடல் நடவடிக்கை துறை இராஜாங்க அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

