பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முதலமைச்சர்களுக்கும் இடையில் இடம்பெறவுள்ள விசேட சந்திப்பில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பு தொடர்பில் தனக்கு எவ்வித அறிவிப்பும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்த முதலமைச்சர், எனவே தான் எவ்வாறு இதில் கலந்துக் கொள்வது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தேச அபிவிருத்தி விசேட ஒழுங்கு விதிச் சட்டமூலம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் பிரதமருக்கும் முதலமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) அலரி மாளிகையில் மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் பங்குக் கொள்வதற்காக வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் இது குறித்து வடமாகாண முதலமைச்சரிடம் வினவிய போது குறித்த சந்திப்பு தொடர்பில் தனக்கு எவ்வித அழைப்பும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வடமாகாண சபையில் 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் மாகாண சுகாதார அமைச்சுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மீதான குழுநிலை விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில், அதில் முதலமைச்சர் பங்குகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

