கடந்த ஒரு வாரமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று (வெள்ளிக்கிழமை) வீடு திரும்புகிறார்.
கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர் வீடு திரும்கிறார் என தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.நீர்ச்சத்து, ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 15ஆம் திகதி இரவு காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
காவேரி மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தொண்டை, நுரையீரல் தொற்றால் கருணாநிதிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. எனவே, மூச்சு விடுவதை எளிதாக்கும் டிரக்யாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டிருந்தது.இதனையடுத்து கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதனை உறுதி செய்யும் வகையில், கருணாநிதி நலமுடன் நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கும் புகைப்படத்தையும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது.
இந்நிலையில் தி.முக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்புவதாக கூறப்படுகின்ற நிலையில், தி.மு.க தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

