டிசம்பரில் ஜனாதிபதியிடம் நல்லிணக்கப்பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை

352 0

1470133160_download-9நல்லிணக்கப் பொறிமுறைகள் குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை வரும் புதன்கிழமை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக செயலணியின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்ற கிறிஸ்மஸ் நிகழ்வில் பங்கேற்றபோதே அவர் இந்தத்தகவலைத் தெரிவித்தார்.

கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை கடந்த நவம்பர் மாத இறுதியிலேயே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் ஜனாதிபதி – பிரதமர் ஆகிய இருவரிடமும் ஒரேதருணத்தில் அறிக்கையைக் கையளிப்பதற்கான பொருத்தமான நேரத்தைப் பெறமுடியாமை அறிக்கையை முழுமையாக அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் என்பவற்றால் முன்னதாக திட்டமிட்டவகையில் அறிக்கையைக் கையளிக்க முடியவில்லை எனக் காரணங்கள்கூறப்பட்டன.

எனினும் தற்போதைய நிலையில் நாளை மறுதினம் டிசம்பர் 21ஆம் திகதி இந்தச் செயலணி அதன் அறிக்கையைக் கையளிக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 27ஆம் திகதி ஊடகவியலாளர் மாநாடொன்றையும் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உண்மை மற்றும் நீதியைக் கண்டறிதல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல், அதற்கான இழப்பீடுகளைப் பெறுவதற்கு வழிவகைசெய்தல் போன்ற ஸ்ரீலங்காவின் நல்லிணக்கப் பொறிமுறைகள் மற்றும் வழிவகைககள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக நல்லிணக்கப் பொறிமுறைகள் குறித்த கலந்தாலோசனைச் செயலணி இவ்வாண்டு ஜனவரி 26 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த நோக்கங்களை அடைவதற்காக காணமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம், உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள நிகழாமைக்கான ஆணைக்குழு  விசேட நீதிமன்றத்தை உள்ளடக்கிய நீதிமன்ற பொறிமுறை, இழப்பீட்டிற்கான அலுவலகம் ஆகியவற்றை அமைக்க உத்தேசித்துள்ளதாக அரசாங்கம் ஏற்கனவே தகவல்வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

கலந்தாலோசனைச் செயலணி வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பலபகுதிகளிற்கும் நேரடியாக விஜயம் செய்து மக்களின் கருத்துக்களைப் பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்கத்கது.