சாவகச்சேரி விபத்தில் உயிரிழந்த 11 பேரது உடல்களும் களுத்துறைக்குக் கொண்டுசெல்லப்பட்டன

278 0

accidentயாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், ஆறு ஆண்களும் ஜந்து பெண்களும் உள்ளடங்கலாக பலியான பதினொரு பேரது சடலங்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து விஷேட வானூர்தி மூலம் களுத்துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பதினொரு பேருக்கும் நெஞ்சு, வயிறு ஆகிய பகுதிகள் உள்ளடங்கலாக உடலின் பல பாகங்களிலும் ஏற்பட்ட காயங்களே மரணத்திற்கான காரணம் என யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் களுத்துறையில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளது ஹயஸ் வாகனமும் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட கோர விபத்து சம்பவத்தில் ஹயஸ் வாகனத்தில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் பத்துபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.

அத்துடன் குறித்த சம்பவத்தில் ஹயஸ் வானில் பயணித்த இருவரும் மற்றும் பேரூந்தில் பயணித்த நால்வருமாக ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரான குறித்த ஹயஸ் வானில் பயணித்த பதினொராவது நபரும் சிகிச்சை பலனின்றி அன்று மாலை உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் இவ் விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஏழு பேர் மாதம்பை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் இருவர் கலித்தோட்ட பகுதியையும் ஒருவர் பத்தரகாம பகுதியையும் மற்றைய நபர் மாத்தளை பகுதியையும் சேர்ந்தவர்களாவர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களது சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சாவகச்சேரி பதில் நீதிவான் எஸ்.கணபதிபிள்ளை நேரில் சென்று மரண விசாரனைகளை மேற்கொண்டிருந்தார்.

அத்துடன் சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகளை யாழ்.போதனா வைத்தியசாலையின்  சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் மேற்கொண்டிருந்தார்.

இதற்கமைய குறித்த மரணம் ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் சட்ட வைத்திய தெரிவிக்கையில், குறித்த அனைவரது உடலிலும் நெஞ்சு மற்றும் வயிற்று பகுதியில் பலமான காயம் ஏற்பட்டிருந்தது. அத்துடன் உடலில் ஏனைய பகுதிகளிலும் ஏற்பட்டிருந்த காயங்களே இவ் மரணத்திற்கான காரணமாகும். குறிப்பாக உயிரிழந்தவர்களது உடலில் உள்ள காயங்களை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது விபத்து இடம்பெற்று சிறிது நேரத்திலேயே உயிரிழந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து குறித்த பதினொரு சடலங்களில் மாத்தளை பகுதியை சேர்ந்தவரது சடலமானது வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதுடன் ஏனைய பத்து பேரது சடலங்களும் இலங்கை விமான படையினரது ஒத்துழைப்புடன் விஷேட வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் பலாலியில் இருந்து கொழும்பு இரத்மலானை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து களுத்துறை மாதம்பை மற்றும் எனையோரது இடங்களுக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டிருந்தது.

மேலும் குறித்த விபத்து சம்பவத்தையடுத்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நேற்று அதிகாலை முதல் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த நிலையில் அவர்களுக்கான தங்குமிட ஏற்பாடுகள் அவர்களுக்கான உணவு ஏற்பாடுகள் போன்ற அவர்களது அனைத்து தேவைகள் தொடர்பான ஏற்பாடுகளையும் யாழ்.போதனா வைத்தியசாலையினர் ஏற்பாடு செய்திருந்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தார்.

இதேவேளை குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்ற போது ஜாதி பேதங்களை மறந்து காயமடைந்தவர்களை உடனடியாக வைத்தியசாலையில் சேர்பதற்கு உதவிய யாழ்.மக்களுக்கு உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இது தொடர்பாக இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சிலர் தெரிவிக்கையில், தாம் தமிழர்கள் தம்மீது வெறுப்பாக உள்ளார்கள் என நினைத்துகொண்டிருந்த நிலையில் இவ் விபத்தில் அத்தகைய தமிழ் மக்களே தமக்கு பூரண உதவிகளை வழங்கியிருந்தார்கள்.

எமது இறந்த உறவுகளையும் காயமடைந்தவர்களையும் உடனடியாகவே வாகனத்தில் இருந்து மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கும் எனைய உதவிகளை செயவதற்கும் பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள். அத்துடன் யாழ்.போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்தினரும் தமக்கு தங்குமிட உணவு ஏற்பாடுகளை வழங்கியிருந்தனர். இவ்வாறான நிலையில் இவர்கள் எமக்கு வழங்கிய உதவிகளை சாகும் வரையில் மறக்க மாட்டோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.