தங்கொட்டுவ பகுதியில் கப்பம் கோரி 17 வயது பாடசாலை மாணவனை கடத்திய சம்பவம் தொடர்பில் இளைஞர்கள் இருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் இருவரும் கடத்தப்பட்ட மாணவனின் நண்பர்கள் என தங்கொட்டுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கப்பம் பெற்றுக்கொள்ளும் நோக்குடன், கடத்தப்பட்ட மாணவனாலேயே இந்த கடத்தல் திட்டம் இடம்பெற்றிருக்காலம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த மாணவன் தற்போது கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றியிருக்கின்றார்.
எனவே, பரீட்சைகள் முடிவடைந்த பின்னர் இவர் கைதுசெய்யப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தங்கொட்டுவ, கொடெல்ல வித்தியாலய மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது குறித்த 17 வயது மாணவன் கடத்தப்பட்டதாக நேற்று முன்தினம் தகவல் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, கடத்தப்பட்ட மாணவன் அன்று இரவே தனது தந்தைக்கு தொலைபேசி அழைப்பொன்றை எடுத்துள்ளார்.
தன்னை விடுவிக்க வேண்டுமாயின், 7 கோடியே 75 லட்சம் ரூபா கப்பம் வழங்க வேண்டும் என கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுவபவர்கள் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் சம்பவம்; தொடர்பில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாணவனின் தந்தை காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து, மேற்கொண்ட விசாரணைகளின் போது, அப்பகுதியில் மூடப்பட்டிருந்த களஞ்சியசாலை ஒன்றிலிருந்து குறித்த மாணவன் நேற்று மாலை மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

