ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் எதிர்ப்பு நடவடிக்கையானது தம்மால் ஒழுங்கு செய்யப்பட்டதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் எதிர்ப்பு மற்றும் அதனை கடற்படையினர் தலையிட்டு கலைத்தமை சம்பந்தமாக நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எனது தந்தையின் அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால், துறைமுக ஊழியர்களின் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கும். துறைமுகமும் விற்பனை செய்யப்படாது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் இருந்தும் இந்த பிரச்சினை குறித்து அவர்கள் கவனம் செலுத்தவில்லை.
துறைமுகம் எமது வீட்டுக்கு அருகில் இருப்பது மற்றும் ஹம்பாந்தோட்டை அபிவிருத்திக் குழுவின் முன்னாள் தலைவர் என்ற வகையில் இது தொடர்பாக தேடி அறியும் உரிமை எனக்கு உள்ளது.
இதன் காரணமாக இந்த பிரச்சினையில் தலையிட்டேன் என நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
ஊழியர்களின் எதிர்ப்பு காரணமாக கப்பல்கள் துறைமுகத்தில் இருந்து வெளியேறாததால், தினம் 6 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் தொடர்ந்தும் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்ச, நஷ்டம் ஏற்படுகின்றது என்பதற்காக கடற்படையினரை பயன்படுத்தி ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
ஊழியர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய பிரச்சினை தீர்க்க முடியும் என்ற நிலையில், கடற்படையினரை கொண்டு தாக்குதல் நடத்தியதன் மூலம் இந்த அரசாங்கம் பதவிக்கு வரும் போது கூறியது நினைவுக்கு வருகின்றது.
துறைமுகத்தை விற்பனை செய்யும் தொகை என்ன என்பதை கூட துறைக்கு பொறுப்பான அமைச்சரால் கூறமுடியவில்லை.
துறைமுகத்திற்கு சொந்தமான ஹெக்டயருக்கும் மேற்பட்ட காணி, கரையோர பூங்கா என்பவற்றின் பெறுமதி மதிப்பீடு செய்யப்படாமல் விற்பனை செய்யப்படுவதை நான் எதிர்க்கின்றேன் எனவும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

