யாழ்ப்பாண குருநகர் உயர் தொழில்நுட்ப கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப கற்கைநெறிப் பிரிவின் விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று(8) காலை 10.30 மணியளவில் கொக்குவில் சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது யாழ்ப்பாண குருநகர் உயர் தொழில்நுட்ப கல்லூரியின் பணிப்பாளர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம் மற்றும் கணனி விஞ்ஞான பீடத்தின் தலைவர் கே.தபோதரனும், கௌரவ விருந்தினராக தேசிய உயர் தொழில்நுட்ப கல்லூரியின் பணிப்பாளர் ஹிலாரி இ.சில்வாவும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வில் அண்மையில் நடாத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப மென்பொருள் கண்காட்சியில் சிறந்த ஆக்கங்களை முன்வைத்த வெற்றியாளர்கள்,மற்றும் முகாமைத்துவம் சார்பான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இந்நிகழ்வில் மாணவர்கள்,விரிவுரையாளர்கள்,கணனி கற்கை நெறியினை வழங்கும் ஏனைய நிறுவனங்களின் பணிப்பாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

