மே 18ம் நாளில் முள்ளிவாய்க்கால்.

95 0

மே 18ம் நாளில் முள்ளிவாய்க்கால்.
********
இன்றைய நாள் அப் பொழுதை எண்ணி நான்
எழுதப் போயமர்ந்து நினைவு முட்டத் தலை குனிந்தேன்…
எண்ணியெண்ணிக் கண்ணீர்தான் சொட்டுகிறது காகிதத்தில்..!
அழுத முகங்கள் காட்டும் ஆறாத வேதனையை
எழுத மறுக்கிறது என் மனதோடு எழுதுகோலும்!

வீரிய மறவர்கள் முகங்காட்டி வீழ்ந்தது கண்டும்…
மேலெழும் கரும் புகையில் தமிழன் துயரறிந்தும்…
சூரியன் சோகத்தில் முகம் மறைத்த விடிகாலை!
மே பதினெட்டில் பதிவான அந்த அதிகாலை!

எட்டி நின்று குறிபார்த்துக் குண்டுபோட்ட கொடியபடை
எல்லாம் முடித்தங்கே வென்றோம் என்ற வெற்றுப் பகட்டில்
விட்டு வந்த இறுதி இடத்தில் மார்புதட்டி
எட்டிக் கால் பதிக்கிறது எங்கள் மேனிகள் மேல்!

கால் வைக்கவே கூசுமந்தக் கொத்துக் கொலைக்களத்தில்
பயந்து பதுங்கிப் போகுமந்தப் படைகளுக்கோ
மெத்தப் பயத்தோடு அத்தருணம் அங்கே
பார்வையற்றோர் இடறல்போல் இருந்திருக்கும், இது உண்மை!

இத்தனை உடல்களா?
இதை நாம் செய்தோமா? என
மண்டியிட்டு அழுதிருப்பான்
மனித ஜாதி அவனென்றால்!

லட்சத்து உறவுகளின் ஒற்றைக் கல்லறையாய்…
லட்சியத்தின் உறவுகளின் உறங்காத நெஞ்சறையாய்..
உச்சமாய் எமக்கான அவலத்தின் அடையாளமாய்…
எச்சமாய் இருக்கின்ற விடுதலையின் எடுகோளாய்..
புரிந்துகொள்வதற்கான பெரும் பாடமாய்..
பிரிந்து வாழ்வதற்கான பெரு வலியாய்..
எழுந்து நிற்கிறது எங்கள் முள்ளிவாய்க்கால்!

தூயவர் குரலும் துப்பாக்கியும்தான் மௌனித்ததங்கே..
தூரமாய் நின்று நாம் மௌனம் கொள்ளல் துரோகமடா தமிழா!
ஆழுகையை நிறுத்தி ஆற்றுப்படுத்த வா…
எழுகை என்பே எமதாய் மாறட்டும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

-வன்னியூர் குரூஸ்-