உலக நாடுகளால் கொண்டுவரப்படும் முடிவுகளை இலங்கை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது- ஸ்ரீதரன்

378 0

ஐக்கிய நாடுகள் பிரேரணையில் இருந்து இலங்கை விலகிக்கொள்வதாகத் தீர்மானித்திருப்பது, உலக நாடுகளால் கொண்டுவரப்படும் முடிவுகளை கேள்விக்குட்படுத்தும் செயற்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீறிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் மக்கள் சார்பாக  ஜெனிவாவுக்குச் சென்றுள்ள அவர் அங்கிருந்து கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்ர கூறகையில், “ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டிலே, ஏற்கனவே கொண்டுவரப்பட்டுள்ள 30/1 40/1 தீர்மானங்களில் இருந்து விலகிக்கொள்வதாகவும் அதன் அனைத்து செயற்பாடுகளில் இருந்தும் ஒதுங்கிக் கொள்வதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது மிகவும் அபாயகரமான செய்தி. இலங்கையைப் பொறுத்தவரைக்கும் தாங்கள் புரிந்த போர்க் குற்றங்கள், மனிதப் படுகொலைகள் குறிப்பாக தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறி நீதியை வழங்கவேண்டிய ஒரு காலகட்டம் இது.

இந்நிலையில், ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. ஆனால், புதிய அரசாங்கம் வந்ததையடுத்து இந்த விடயங்களிலிருந்து விலகிக்கொள்வதாகக் குறிப்பிடுவது தேர்தல் விஞ்ஞாபனத்தையும் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையும் மையப்படுத்தியே அவர்கள் இதனைக் கையாள்கிறார்கள் என்பதே உண்மை.

உலகத்திலேயே மனித குலத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த இனப்படுகொலையை மூடி மறைத்தல் அல்லது தாங்கள் அதிலிருந்து விலகுவதாக ஒருபக்கச் சார்பாக இலங்கை விலகிக் கொள்ளுதல் என்பது உலக நாடுகள் கொண்டுவருகின்ற தீர்மானங்களை கேள்விக்கு உள்ளாக்குகிறது.

அடுத்துவரும் காலங்களில் உலகத்தில் இவ்வாறு மனிதப் பேரவலங்கள் நடைபெற்றால் இந்த உலகம் என்ன செய்யப்போகின்றது என்ற கேள்வியை முன்வைத்துள்ளது.

ஆகவே, இலங்கையின் இந்த செயற்பாடு தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களை நீதியின் தராசுக்குக் கொண்டுசெல்ல முனைகிறது. இலங்கை இவ்வாறு பல ஒப்பந்தங்களிலே பின்வாங்குதல் அல்லது அவர்கள் அதிலிருந்து ஒதுங்கிக் கொள்வது அவர்களுக்குப் புதிய விடயம் அல்ல.

இப்பொழுது ஒரு சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொண்ட விடயத்தில் இருந்துகூட இலங்கை விலகுவதாகக் குறிப்பிடுவது இலங்கையின் கடந்தகால சிங்கள பௌத்த பேரினவாத அடிப்படைகளை மிகத் தெளிவாகக் காட்டுகிறது.

ஆகவே இலங்கையின் இந்தப் போக்கு தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று விரும்பும் நாடுகளைத் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது.

எனவே, நீதியின் தராசில் உலகத்தினுடைய மனித உரிமைகள் ஆணையகம் உண்மையைக் கண்டறிந்து, நீதியை நிலைநாட்டி மீண்டும் இனப்படுகொலை நடைபெறாவண்ணம் தன்னுடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.