சஜித் கூட்டணியில் இணைந்தது முஸ்லிம் காங்கிரஸ்!

239 0

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் (சமகி ஜன பலவேகய) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக இணைந்தது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூவ் ஹக்கீம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டனர்.

இதன்போது, ஊடகங்களிடம் சஜித் பிரேமதாச தெரிவிக்கையில், “ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பொதுக் கூட்டணியில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூவ் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து கொண்டுள்ளமை எமக்கு பாரிய பலமாகும். ஜனநாயகத்தை மையமாகக் கொண்டு செயற்படும் கட்சிகள் தொடர்ந்தும் இந்தன் கூட்டணியுடன் இணைந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில், அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகனேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஹெல உறுமய அமைப்பினர் மற்றும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியினர் உள்ளிட்ட பல தரப்பினர் அண்மையில் கூட்டணியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்கள்.

கூட்டணியில் இன்னும் பலம் வாய்ந்த அரசியல் கட்சிகள் குறுகிய காலத்திற்குள் இணைந்து கொள்வார்கள். அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டே பொதுக் கூட்டணி செயற்படும்.

கூட்டணியின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ உடன்பாட்டுடனும், கட்சியின் செயற்குழுவின் ஏகமனதான தீர்மானத்திற்கமையவும் உருவாக்கப்பட்ட சட்டபூர்வமான இந்த கூட்டணியுடன் இவ்வாறாக கட்சிகள் வந்து இணைந்து கொள்கின்றமை பாரிய பலமாகும்” என அவர் தெரிவித்தார்.