ஓரிரு நாட்களில் எல்லாப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்- இராதா

205 0

ஐக்கிய தேசியக்கட்சி யானை சின்னத்தை விட்டுக்கொடுத்தால், சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணி யானை சின்னத்தின் கீழ் பொதுத்தேர்தலில் போட்டியிடும். அவ்வாறு இல்லாவிட்டால் அன்னம் சின்னமும் பரீசிலனையில் இருக்கின்றது. எது எப்படியிருந்த போதிலும் இன்னும் ஓரிரு நாட்களில் எல்லாப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அத்துடன், பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கலந்தரையாடி முக்கியமான சில முடிவுகளை எடுப்பதற்கான தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக்கூட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது எனவும் அவர் கூறினார்.

டயகம ஆடலி தோட்டத்தில் இன்று (15) மாலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் மற்றும் தோட்டத்திற்கான சமையல் பாத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“மார்ச் 2 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 ஆம் திகதியளவில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம். 8 ஆக இருக்கின்ற நுவரெலியா மாவட்ட பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இம்முறை 9 ஆக அதிகரிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

ஏதுஎப்படியிருந்தபோதிலும் இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் கடும் போட்டி நிலவக்கூடும். கடந்த முறை தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் நானும், திகாவும், திலகரும் களமிறங்கினோம். இம்முறையும் மூவரும் போட்டியிடுகின்றோம். கடந்த முறைபோல் எம்மிடம் ஆட்சி அதிகாரம் இல்லை.

தமிழ் வாக்குகளை சிதறடிக்க சிலர் முயற்சிக்கலாம். எனவே, மிகவும் பொறுமையாகவும், தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை அறிந்தும் வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அதேவேளை, பொதுத்தேர்தலில் போட்டியிட வேண்டிய சின்னம் தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் ஏற்பட்டிருந்த பிரச்சினை நேற்றுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ரணிலும், சஜித்தும் இணைந்து கூட்டணியாக போட்டியிட இணக்கம் வெளியிட்டுள்ளனர். இது மகிழ்ச்சியளிக்கின்றது.

குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சி யானை சின்னத்தை விட்டுக்கொடுத்தால் புதிய கூட்டணியின் பொது சின்னமாக அதனை ஏற்று போட்டியிடுவோம். அவ்வாறு இல்லாவிட்டால் அன்னமும் தேர்வாக இருக்கின்றது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பிரச்சினைக்கு முழுமையாக முடிவு கட்டப்படும் என நம்புகின்றோம்.

ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் பல பிரச்சினைகள் இருந்தாலும் நாட்டின் பொருளாதாரம் ஸ்தீரமாகவே இருந்தது. எனினும், இந்த ஆட்சியின்கீழ் பொருட்கள், சேவைகளின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன .பொருளாதாரம் ஸ்தீரமற்ற நிலையிலேயே இருக்கின்றது.

எனவே, சஜித் பிரேமதாசவை பிரதமராக்கி மீண்டும் நல்லாட்சியை ஏற்படுத்த எமக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.