கடந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொள்ளவில்லை- கமல் குணரட்ன

213 0

தேசிய பாதுகாப்பு தொடர்பான தெளிவில்லாத அரசாங்கம் ஒன்று இருந்த காரணத்தினால்தான், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு நாடு முகம் கொடுத்தது என்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்தார்.

பன்னிப்பிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.  கமல் குணரட்ன மேலும் கூறியுள்ளதாவது, “எமது நாட்டில் 30 வருட காலமாக கொடிய யுத்தம் இருந்தது. இதனை முடிவுக்குக் கொண்டுவர நாம் பல அர்ப்பணிப்புக்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

எனினும், யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு 10 வருட மகிழ்ச்சியை கொண்டாட, சில தினங்களே இருந்தபோதுதான் ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதனால், ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்பட்டது. சுதந்திரமாக நடமாடிய மக்கள், வீட்டை விட்டு வெளியேறவே அஞ்சினார்கள்.

இதற்கு என்ன காரணம்? பல அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டு நாம் பெற்றுக்கொண்ட இந்த சுதந்திரத்திற்கு என்ன நடந்தது?

நான் பழைமையை மீண்டும் பேச விரும்பவில்லை. ஆனால், ஜனநாயகம் மற்றும் தேசிய ஐக்கியத்தை பலப்படுத்த, தேசிய பாதுகாப்பை கடந்த அரசாங்கத்தினர் கவனத்தில் எடுக்காதமைக்கான விளைவே இந்த ஈஸ்டர் தாக்குதல் என்பதை கூறித்தான் ஆக வேண்டும்.

இதனால்தான் 290 பேரின் உயிர்கள் காவுக்கொள்ளப்பட்டன. பொறுப்புக் கூற வேண்டிய இடத்தில் இருந்தவர்கள், தமது கடமைகளை நிறைவேற்றாதன் விளைவாகவே இதனை நாம் காண்கிறோம்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான தெளிவின்மை இல்லாத அரசாங்கத்தினால்தான் இந்த நிலைமை ஏற்பட்டது” என குறிப்பிட்டுள்ளார்.