ரஞ்சனின் பிணைக் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

200 0

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பிணைக் கோரிக்கை நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவரை  தொடர்ந்தும் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதிபதிகளின் விடயங்களில் தலையீடு செய்தமைக்காக அரசியலமைப்பின் 111 சி (2) வது பிரிவை மீறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது.

சமூக ஊடகங்களில் வெளியான அவரது சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்களை அடுத்து நுகேகொட நீதிவான் வழங்கிய பிடியாணை உத்தரவினைத் தொடர்ந்து ஜனவரி 14 ஆம் திகதி அவரது இல்லத்தில் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டார்.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான பத்மினி என்.ரணவக்க குணதிலக, கிஹான் பிலபிட்டிய மற்றும் தம்மிக்க ஹேமபால ஆகியோருடன் ரஞ்சன் ராமநாயக்க பேசிய குரல் பதிவுகளே இவ்வாறு வெளியாகியிருந்தன.

இதனை அடுத்து கடந்த 7 ஆம் திகதி, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் ரஞ்சன் ராமநாயக்க குரல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.