சஜித் தலைமையிலான புதிய கூட்டணியில் மூன்று முக்கிய கட்சிகள் இணைவு!

198 0

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியில் இணைந்துகொள்வதாக ஜாதிக ஹெல உறுமய, தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறாக பயணிக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பாரிய மக்கள் சக்தியை உருவாக்கும் பொறுப்பு தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த கூட்டணியின் காட்சிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்களின் அபிலாஷைகளை உறுதிப்படுத்தும் அரசாங்கமொன்றை உருவாக்கும் உன்னத முயற்சிக்கு பங்களிப்புச் செய்வதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொய் மற்றும் தவறான பிரசாரம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள தற்போதைய அரசாங்கத்தைத் தோற்கடித்து முற்போக்கான வலுவான அரசாங்கமொன்றை உருவாக்குவதற்காக சஜித் பிரேமதாசவின் தலைமையிலான கூட்டணியில் இணைந்து செயற்படவுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தவருடம் ஏப்ரல் மாதமளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலுக்காக சஜித் தலைமையில் புதிய கூட்டணி ஒன்றினை உருவாக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இதனை அடுத்து அக்கூட்டணிக்கு பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவையும் நியமிக்க கடந்த திங்கட்கிழமை கட்சியின் செயற்குழு தீர்மானித்திருந்தது.

இந்நிலையில் சஜித் பிரேமதாசாவை பிரேத வேட்பாளராக களமிறக்கி எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற்றுக்கொள்ளும் முகமாக பலர் அவருக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

இருப்பினும் குறித்த கூட்டணிக்கு ‘தேசிய சமாதான கூட்டணி’ என்று பெயரிடப்பட்டுள்ளதோடு புதிய சின்னம் தொடர்பாக கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.