தடவியல் அறிக்கை தொடர்பான மத்திய வங்கியின் சுய அவதானிப்புகளை கேட்டறிய தீர்மானம்

403 0
மத்திய வங்கி திறைசேரிமுறி வழங்கல் குறித்த தடவியல் அறிக்கை தொடர்பான இலங்கை மத்திய வங்கியின் அவதானிப்புகளை கேட்டறிய பாராளுமன்ற குழு தொகுதியில் நேற்று (05) கூடிய அரசாங்க நிதி பற்றிய தீர்மானித்தது.

இதன்போது, திறைசேரிமுறி வழங்கல் குறித்த தடவியல் அறிக்கை தொடர்பான இலங்கை மத்திய வங்கியின் சுய அவதானிப்புகளை கேட்டறிவதன் முக்கியத்துவத்தை குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தினார்.

அதன்படி, எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ள குழுவின் அடுத்த கூட்டத்தில் மத்திய வங்கியின் அவதானிப்புகளை கேட்டறியும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை அழைக்குமாறு குழு அலுவலர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

இதேவேளை, பெறுமதிசேர் வரியை 8 வீதமாக குறைக்கும் 2005 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தியமைக்கப்பட்டவாறான 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் 2அ பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளைக்கு குழு அனுமதி வழங்க மறுத்தது. அதன்படி, குறித்த விடயம் தொடர்பான விரிவான நிதி நியாயப்படுத்தலை அடுத்த குழுக்கூட்டத்தில் முன்வைக்குமாறும் பணிப்புரை வழங்கப்பட்டது.

மேலும், 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான புகையிலையிலான அல்லது புகையிலைக்கு பதிலான பொருட்கள் மீதான கட்டளைகளுக்கும் குழு அனுமதி வழங்க மறுத்தது. இது தொடர்பில் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகார சபையின் ஆலோசனையை பெருமாறும் அதன் அதிகாரிகளை அடுத்த குழுக்கூட்டத்தில் சமூகமளிக்குமாறும் அரசாங்க நிதி பற்றிய குழு பணிப்புரை வழங்கியது.

இராஜாங்க அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, பிமல் ரத்நாயக்க, மயந்த திசாநாயக்க, பேராசிரியர் ஆசு மாரசிங்க மற்றும் கலாநிதி எஸ்.எம். முகம்மட் இஸ்மாயில் ஆகியோர் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.