வதிவிடத்தை உறுதிபடுத்துவதற்காக கிராம சேவையாளரின் ஊடாக வழங்கப்படும் சான்றிதழ் இனிமேல் பிரதேச செயலாளரின் ஊடாக உறுதிபடுத்தப்படாது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
அற்கமைய வதிவிடத்தை உறுதிப்படுத்த இனிமேல் கிராம சேவையாளரின் ஊடாக வழங்கப்படும் சான்றிதழ் மாத்திரம் போதுமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமையவே இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண அததெரணவிடம் தெரிவித்தார்.
மக்களுக்கு இலகுவான சேவையை வழங்கும் நோக்குடனேயே அரச பொது நிர்வாக அமைச்சினால் இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படுவதாக அவர் கூறினார்.
வதிவிடத்தை உறுதிபடுத்தும் ஆவணங்கள் கிராம சேவையாளரினால் வழங்கப்படும் பட்சத்தில் அதனை மீள உறுதிப்படுத்திக்கொள்ள பிரதேச செயலாளரை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதால் பொது மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளவதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்த வர்த்தமானி அறிவித்தலை அரச பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே வதிவிட சான்றிதழை இனிமேல் கிராம உத்தியோகத்தர் வழங்க முடியும் என்பதோடு அதற்கு பிரதேச செயலாளரின் கையொப்பம் தேவையில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மேலும் தெரிவித்துள்ளார்.

