விமானங்களை கொள்வனவு செய்வதற்காக ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கும் மற்றும் ஏர்பஸ் நிறுவனத்திற்கும் இடையில் இடம்பெற்ற பரிவர்த்தனையின் போது ஏற்பட்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தேசிய விமான சேவை, விமானங்களை உற்பத்தி செய்யும் ஏர்பஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் மேற்கொண்ட பரிவர்த்தனையின் போது சிலரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலான தகவல்கள் அடங்கிய அறிக்கை இன்று (02) வார இறுதி ஆங்கில பத்திரிக்கை ஒன்றிலும் மற்றும் நேற்று (01) இணையத்தளம் ஒன்றிலும் வௌியிடப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளடக்கிய வகையில் உடனடியாக முழுமையான விசாரணை ஒன்றை மேற்கொண்டு அதன் முடிவை தனக்கு அறியப்படுத்துமாறு ஊடக அறிக்கையை பார்வையிட்ட ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

