ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த 69 இலட்சம் பேரின் எதிர்ப்பார்ப்புக்கள் அனைத்தும், புதிய அரசாங்கத்தால் தகர்த்தெறியப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “69 இலட்சம் பேரின் எதிர்ப்பார்ப்பு இன்று முற்றுமுழுதாக தகர்த்தெறியப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்புக்கள் இல்லாமல் போயுள்ளன. இலவசமாக உரத்தை வழங்குவதாகக் கூறினார்கள். அதனை மேற்கொள்ளவில்லை.
நெல் நிர்ணய விலையில் கொள்வனவு செய்வதாகக் குறிப்பிட்டார்கள். அதுவும் நடக்கவில்லை. மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளமும் அதிகரிக்கப்படவில்லை.
இந்த நிலைமைத்தான் இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து மக்களை பாதுக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.
இதற்காக பொதுத் தேர்தலைத் தொடர்ந்து புதிய பயணத்தை நாம் ஆரம்பிக்கவுள்ளோம். உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை முதலில் பலப்படுத்த வேண்டும்.
இதன் ஊடாக மட்டுமே, புதிய வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள முடியும். தேசிய கொள்கையுடன் நாட்டை அபிவிருத்தி செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

