தலைமைத்துவம் மற்றும் பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை கூடவுள்ளது.
கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் கூடவுள்ள மத்திய செயற்குழுவில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்படவுள்ளது.
கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு வாக்கெடுப்பின்றித் தீர்வினை வழங்குமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் பின் வரிசை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை தொடர்பாகவும் நாளைய மத்திய குழுவில் ஆராயப்படவுள்ளது.
இதன்போது குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை மீண்டும் பிரதித் தலைவராக நியமிப்பதற்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான பதவிகள் தொடர்பான தெரிவுகள் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளன. மேலும் முரண்பாடுகள் இன்றி தலைமைத்துவம் குறித்த பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கான நடவடிக்கைகளை கட்சி முன்னெடுத்து வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

