பிணைமுறி விவகாரம் தொடர்பாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உரிய தெளிவுப்படுத்தலினை விரைவில் ஊடகங்கள் ஊடாக முன்னெடுப்பார் என தகவல் மற்றும் தொடர்பாடல், உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அரசாங்கம் எவ்வித ஆலோசனைகளையும் வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீதித்துறையின் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை கொள்ளும் விதத்தில் தவறுகள் திருத்திக்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கல் விநியோகத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன என்பதை பொதுஜன பெரமுனவினரே ஆரம்பத்தில் பகிரங்கப்படுத்தினோம்.
தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலும் முறிகள் கொடுக்கல் வாங்கலில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றன.
இவ்விடயம் தொடர்பாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உரிய தெளிவுப்படுத்தலினை விரைவில் ஊடகங்கள் ஊடாக முன்னெடுப்பார்.
சமூக வலைத்தளங்களில் கடந்த வாரங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு மக்களின் வரவேற்பினை பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் தற்போது முழு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இந்த குரல் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அரசாங்கம் செயற்படுவதாக குறிப்பிடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

