மோசடியாளர்களே அறிக்கையை தயாரித்துள்ளதால் புதிய விசாரணைகள் அவசியம் – திலும் அமுனுகம

284 0

மத்திய வாங்கி மோசடி தொடர்பான தடயவியல் அறிக்கை குறித்து தற்போதைய அரசாங்கத்தின் கீழ் புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் உள்ள குழுவினராலேயே இந்த அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் இந்த மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், மத்திய வங்கி மோசடி விவகாரத்தினால் ஜனாதிபதி தேர்தலில் கடந்த அரசாங்கம் தோல்வியை சந்தித்தது மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தை அழிவுக்கு இட்டுச் சென்றது என கூறினார்.

மோசடி குறித்து விசாரணை செய்ய முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க 3 பேர் கொண்ட குழுவை நியமித்தார் என்றும் அந்த குழு பத்திர விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை எனக் கூறியதனையும் திலும் அமுனுகம இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனவே தற்போதைய அரசாங்கம் இந்த தடயவியல் அறிக்கை குறித்து புதிய விசாரணையை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை நாட்டை பொருளாதார மந்தநிலைக்கு இட்டுச்செல்லும் ஒரு கட்சியுடன் இணைந்து ஒரு அரசாங்கத்தை அமைக்கும் எண்ணம் சுதந்திரக் கட்சிக்கு இல்லை என்று அவர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மக்கள் ஒரு தீர்க்கமான ஆணையை வழங்கியிருந்ததால், ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பொதுத்தேர்தலில் தாங்கள் வெற்றிபெறுவது நிச்சயம் என்றும் திலும் அமுனுகம தெரிவித்தார்.