உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் – அரசாங்கத்திடம் சஜித் முக்கிய கோரிக்கை

252 0

கொரோனா வைரஸ் இலங்கைக்குள் பரவாத வகையில் அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) 27/2 இன் கீழ் விசேட கூற்றை முன்வைத்து, கொரோனா வைரஸ் தொடர்பாக அறிவித்தல் விடுத்த போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “எமது நாட்டில் சில காலத்திற்கு முன்னர் சார்ஸ் மற்றும் மேர்ஸ் என்ற வைரஸ் பரவியது. இந்நிலையில் தற்போது கொரோனா என்ற வைரஸ் காரணமாக சீனாவில் இரண்டு நகரங்கள் முற்றாக முடங்கியுள்ளன.

அது இப்போது ஆபத்தான நிலைக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இது இப்போது ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூர் வரையில் பரவியுள்ளது. இந்நிலையில் இந்த மாதம் 25ஆம் திகதி முதல் பெப்ரவரி 8ஆம் திகதி வரையில் சீன புத்தாண்டு காலமும் ஆரம்பிக்கப்படுகின்றது.

இந்நிலையில் எமது நாட்டில் 2014 முதல் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி புள்ளி விபரங்களுக்கமைய சீனாவிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைவிட தற்போது வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கால் அதிகரித்துள்ளது.

70 ஆயிரம் பேர் வரையில் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். தற்போது சீனாவில் குறித்த வைரஸ் பரவியுள்ள நிலையில், சீன புத்தாண்டு காலத்தையொட்டியதாக சீன சுற்றுலா பயணிகள் எமது நாட்டுக்கு பெருமளவுக்கு வரலாம்.

இதனால் இந்த விடயம் தொடர்பாக அரசாங்கமும் சுகாதார அமைச்சரும் உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றேன்”  என மேலும் தெரிவித்துள்ளார்.