பலமான எதிர்க்கட்சியாக உருவாக வேண்டும் என்பதே ஐக்கிய தேசிய முன்னணியின் நோக்கமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். சம்பிக்க மேலும் கூறியுள்ளதாவது, “ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைப்பேசி உரையாடல்கள் அடங்கிய இருவெட்டுக்களை பொலிஸார்தான் கைப்பற்றினார்கள்.
ஆனால், இது எவ்வாறு சமூக ஊடகங்களில் வெளியாகின என்பது தொடர்பாக கேள்வி இருக்கிறது.
இந்த தொலைப்பேசி உரையாடல்களைக் கேட்டும்போது, அங்கு எந்தவொரு அதிகாரிக்கும் அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது.
அதிகாரிகள் ரஞ்சனிடம் தங்களின் கவலைகள், சவால்கள், அழுத்தங்களைத்தான் கூறியுள்ளார்கள்.
தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தவே இந்த சர்ச்சை எழுந்துள்ளது. எம்மைப் பொறுத்தவரை பலமாக எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

