12 பேரின் உயிரைக் காவுகொண்ட பேருந்தின் சாரதிக்கு எதிராக 52 வழக்குகள் தாக்கல்

427 0

பதுளை, பசறை – மடுல்­சீமையில் இடம்பெற்ற விபத்து தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஊழியருக்கு எதிராக 52 வழக்குகளை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விடயம் தொடர்பாக உரிய ஆலோசனைகள் மடுல்சீமை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து பேருந்தின் சாரதி விஜேசிங்க முதியன்சல சாந்தகுமார் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே அவருக்கு எதிராக  52 வழக்குகளை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியபோது, அந்த பேருந்தின் வருமான வரிப்பத்திரம் இருக்கவில்லையென்றும் அது தொடர்பாக பதுளை இலங்கை போக்குவரத்து சபை டிப்போ அத்தியட்சகருக்கு எதிராக வழக்கு தொடரவும் பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

பதுளை பசறை – மடுல்சீமை பிர­தான வீதியின் ஆறாம் கட்­டைப்­ப­கு­தியில் கடந்த 6ஆம் திகதி மாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  40 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.