பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தைப்பிறந்தாள் வழி பிறக்கும் – ஆறுமுக தொண்டமான்

265 0

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தைப்பிறந்தாள் வழி பிறக்கும் என ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு விடயம் தொடர்பாக அமைச்சர் ஆறுமுக தொண்டமான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ”நடைபெற்று முடிந்த  ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மலையக மக்களின் அபிவிருத்தி தொடர்பில் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். இவ் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முன்னாள் அமைச்சர் பி.பி.தேவராஜ் ஊடாக குழு ஒன்று நியமிக்கப்பட்டு இது தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர் மக்களுக்கு புதிய அரசாங்கத்தால் செய்து கொடுக்க வேண்டிய அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையை பிரதமர் அக்குழுவுக்கு வழங்கியிருக்கின்றார்.

மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் மதுபான சாலைகள் அகற்றுவது தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன்  கணிதம், விஞ்ஞானம் ஆகிய  பாடங்களுக்குரிய ஆசிரியர்கள் பற்றாக்குறை நீக்குவதற்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது தொடர்பிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படும் வைத்திய சேவையை விருத்திக்கும் வகையில் தாதியர் பயிற்சி கல்லூரி ஒன்றை அமைப்பது தொடர்பாகவும்,  இதன்போது பிரதமரின் கவனத்திற்கு அக்குழு கொண்டு வந்துள்ளது.  இவ்வாறாக பல்வேறு கோரிக்கைகள் இ.தொ.கா குழுவினரால் முன்வைக்கப்பட்டுள்ளது. இவைகளை அனைத்தையும் நிறைவேற்றுவதில் காங்கிரஸ் கவனம் செலுத்தி வரும்” எனத் தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவீர்கள் என ஊடகவியலாளர்களால் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், பொதுஜன பெரமுனவுக்கே ஆதரவினை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.