மன்னார் பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான வரவு செலவு கணக்கு அறிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச சபையினுடைய 2020 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டமும் சபையினுடைய 22 ஆவது அமர்வும் மன்னார் பிரதேச சபை தவிசாளர் எம்.முஜாஹிர் தலைமையில் நேற்று மன்னார் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
குறித்த கூட்டத்தில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான வரவு செலவுத் திட்டத்தின் கணக்கறிக்கை சபை அங்கத்தவர்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதுடன், இதற்கு எதிராக 10 உறுப்பினர்கள் வாக்களித்த அதேவேளை ஆதரவாக 8 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனையடுத்து குறித்த அறிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த கணக்கறிக்கை நிராகரிக்கப்பட்டது தொடர்பாக மன்னார் பிரதேச சபை தவிசாளர் தெரிவிக்கையில், மக்கள் நலன் சார்ந்து சிந்திக்காமல் அரசியல் ரீதியாக பழி வாங்கவே இவ் கணக்கறிக்கையை ஒழுங்கான காரணம் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உட்பட சிலர் நிராகரித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
அதே நேரத்தில் தவிசாளர் தொடர்சியாக அரசியல் பின்னனியுடன் பக்க சர்பாக செயற்படுவதாகவும் சபை உறுப்பினர்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவது இல்லை எனவும் அறிக்கைக்கு எதிராக வாக்களித்த உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

