மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப்பிரதேசங்களில் தொடர்ந்து பெய்யும் கன மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் தானியங்கி வான் கதவுகள் இன்று (17) காலை 8 மணிக்கு திறந்துள்ளன.
நீர்த் தேக்கத்தின் நீரேந்து பிரதேசங்களில் நேற்று (16) தொடக்கம் பெய்த கனமழையுடன் கொத்மலை நீர்த் தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், வான் கதவுகள் தானாக திறந்துள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அப்பகுதிகளில் மழை பெய்தால் ஏனைய வான் கதவுகளையும் திறக்க நேரிடும் என்பதால், நீர்த்தேக்கத்தின் தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் கொத்மலை ஓயாவின் நீரை பயன்படுத்தும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை , காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை நீர்த்தேக்க பகுதிகளில் பெய்யும் கன மழை காரணமாக குறித்த நீர்த்தேக்கங்கள் பெருக்கெடுக்கும் நிலையை அண்மித்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

