இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிபதிகளான சிசிர டி ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் முன் இந்த வழக்கு விசரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயரத்னவின் குறுக்கு விசாரணைக்கு பதிலளித்த ரஞ்சன் ராமநாயக்க, இந்த வழக்குடன் தொடர்புடைய கேள்வி அறிக்கையை வெளியிட்டதாகக் கூறினார்.
´நீதிபதிகள்´ என்ற வார்த்தை தம்மிடருந்து தவறுதலாக வந்தது என ரஞ்சன் ராமநாயக்க, கூறினார்.
அப்போதைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் நடவடிக்கைகளை விமர்சிப்பதே தவிர, நீதிபதிகளை குறை கூறுவது தமது நோக்கம் அல்ல எனவும் அவர் கூறினார்.
´நீதிபதிகள்´ என்ற சொல் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதை அறிந்தவுடன், அதை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும் இன்றைய தினம் வழக்கு விசாரணை முடிவடைந்து வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை இந்த மாதம் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2017 ஆம் ஆண்டு அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்த ரஞ்சன் ராமநாயக்க அமைச்சர் நாட்டில் உள்ள பெரும்பான்மையான நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஊழல் மிக்கவர்கள் என கூறியிருந்தார்.
இதனடிப்படையில் அவர் நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கலும் செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.

