சிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமுடியும் என்று பழுத்த இடதுசாரி தலைவரான வாசுதேவ நாணயக்கார கூறியிருக்கிறார்.
சமூக ஊடகமொன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் அவரிடம் செய்தியாளர் சிங்கள பௌத்தர் ஒருவரினால் மாத்திரம் தான் ஜனாதிபதியாக வரமுடியுமா என்று கேட்டபோது அவர் சாதியையும் சேர்த்துக் குறிப்பிட்டு வேட்பாளர் கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தாலேயே வெற்றி கிட்டும் என்று குறிப்பிட்டார்.
ஆனால், உடனடியாகவே ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவானதன் மூலமாக சாதி அமைப்புமுறையை தகர்த்ததையும் நினைவுபடுத்த வாசுதேவ தவறவில்லை.
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் கூட்டு எதிரணியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான வாசுதேவ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்சவை ஆதரிக்கிறார்.
பிரேமதாச ஜனாதிபதியாக வந்ததன் மூலமாக நியதியொன்று தகர்க்கப்பட்டபோதிலும், தலைமைத்துவ வரிசை என்று வரும்போது சிங்கள பௌத்த கொவிகம முக்கியஸ்தர்கள் முதன்மைப்படுத்தப்பட்டு நோக்கப்படும் போக்கு இன்னமும் நிலைத்திருக்கிறது. பிரேமதாச ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி நிலவிய காலத்து சூழ்நிலை அவசியப்படுத்திய தேவையின் காரணமாகவே ஜனாதிபதியாக வந்தார்.என்றாலும் கூட அன்று ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருந்த உயர்சாதி உறுப்பினர்கள் எதிர்த்தார்கள்.
தற்போது சிங்கள பௌத்தகொவிகம சாதியத்தைச் சேர்ந்த ஒருவரே நாட்டின் தலைவராக வெற்றிபெற முடியும்.ஜனாதிபதியாக சிங்கள பௌத்த கொவிகம மாத்திரமே தெரிவுசெயயப்பட முடியும் என்ற மனநிலையே நாட்டில் நிலவுகிறது. ஜனாதிபதி பிரேமதாசவின் நியமனத்துடன் நாம் நிப்பிரபுத்துவத்தில் இருந்து வெளியே வந்தோம்.அதை மேலும் எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது குறித்து ஆராயவேண்டும் என்று வாசுதேவ கூறினார்.

