வத்தளை பகுதியில் போதை பொருட்களுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் தடுப்புப்பிரிவினருக்கு நேற்று புதன்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
வத்தளை – புனித செபஸ்தியார் மாவத்தை , ஹெந்தளை, வத்தளை பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு முன்னதாக காணப்பட்ட வீதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான முச்சக்கரவண்டியொன்று சோதனையிடப்பட்டது.
இதன்போது 1 கிலோகிராம் 157 கிராம் நிறையுடைய மெத்தாம்பிட்டமின் எனப்படும் நரம்பு மண்டலத்தை பாதிப்படையச் செய்யக்கூடிய போதை பொருளும், 413 கிராம் ஹஷிஷ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 38 வயதுடைய செல்வகுமார் செல்வதுரை என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து ஒரு இலட்சத்து 24 ஆயிரம் ரூபாவிற்கும் அதிகளவான பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

