பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் முரண்பாடு!

239 0

812பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் முரண்பாடுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினருக்கான சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா குறிப்பிட்டுள்ளார்.

சிறீலங்காவுக்கான பத்துநாள் பயணத்தை இன்றுடன் நிறைவுசெய்த அவர் இன்று மாலை ஊடகவியலாளர்களைச் சந்தித்தார்.

இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், அது தமிழ் மக்களை மிகவும் பாரதூரமாகப் பாதித்துள்ளது. உரிய நடைமுறைகள் இல்லாமல் காலவரையறையின்றி தடுத்து வைக்கும் வகையிலான குறித்த சட்டம் தொடர்பில் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சட்டத்தின் கீழுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம் முக்கியமானதும் கரிசனையானதுமான ஒன்றாகும்.

இது நல்லிணக்க செயற்பாடுகளில் அரசாங்கத்தின் கடப்பாடாக காணப்படுகின்றது. பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டம் சர்வதேச தரங்களை பூர்த்தி செய்வது மிகவும் முக்கியமானது என்பதை அடிக்கோடிட்டுகாட்ட விரும்புகின்றேன் எனத் தெரிவித்தார்.