வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை; அமெரிக்க அதிபர் டிரம்ப்

617 0

வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 4 நாட்கள் சுற்றுப்பயணம் ஆக ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார்.  அங்கு அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபேவை சந்தித்து பேசுகிறார்.  இந்த நிலையில், டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சிறிய ரக ஆயுதங்களை வடகொரியா பரிசோதனை செய்துள்ளது.  இதனால் என்னுடைய நிர்வாகத்தில் உள்ள சிலர் மற்றும் வேறு சிலருக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
ஆனால் எனக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை.  கிம் எனக்கு அளித்த வாக்குறுதியை காத்திடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என தெரிவித்து உள்ளார்.
வடகொரியாவின் சமீபத்திய, குறைந்த தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை பரிசோதனையானது ஐ.நா. தீர்மானங்களை மீறிய செயல் என ஜப்பான் அரசு கூறியிருந்தது.  இதனை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனும் ஆமோதிக்கும் வகையில் பேசினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் அபே ஆகிய இரு தலைவர்கள் இடையேயான இன்று நடைபெறும் சந்திப்பில், வடகொரிய விவகாரம், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் ஈரான் விவகாரம் ஆகியவை பற்றி விவாதிக்கப்படும்.