மாலபேயில் மீட்கப்பட்ட அவயவங்கள் மரபணு சோதனைக்கு

353 0

waseem-1மாலபே ‘சைட்டம்’ தனியார் மருத்துவ கல்லூரியில் இருந்து மீட்கப்பட்ட  மனித அவயவங்களை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சைட்டம் கல்லூரியில் இருந்து, குற்றவிசாரணை திணைக்களத்தினால் கடந்த தினத்தில் 26 மனித அவயவங்கள் மீட்கப்பட்டன.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துகொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் முதலாவது பிரேத பிரிசோதனையின் போது காணாமல் போன அவயவங்கள் தொடர்பில் குறித்த மருத்துவ கல்லூரியை சோதனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி குற்றவிசாரணை திணைக்களத்தினால் இந்த அவயவங்கள் மீட்கப்பட்டன.

இதனிடையே வசிம் தாஜுதின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டார்.

இதனிடையே இந்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நரஹேன்பிட்டிய காவல்நிலையத்தின் குற்றவிசாரணை பிரிவின் முன்னாள் பொருப்பதிகாரி சுமித் ஷம்பிக்கவையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

இதனிடையே, இலங்கை மருத்துவசபையில் தம்மை பதிவு செய்துகொள்வதற்கு மாலபே தனியார் மருத்துவமனை மாணவர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, மத்தியஸ்தம் வகிக்க 13 தரப்பினரால் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கில் மத்திஸ்தம் வகிக்க அரச மருத்துவ பணியாளர்கள் சங்கம் உட்பட்ட 13 தரப்பினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இதற்கான இறுதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் அறிவித்திருந்தது.

இந்தநிலையில், மாலபே மாணவர்களின் கோரிக்கை மனு நவம்பர் மாதம் 8 மற்றும் 10 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது