பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயம் வரலாற்று ரீதியில் பாரிய வெற்றியை அளித்துள்ளது.
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக இதுவரை காலமும் கிடைத்திராத 40 வீத சம்பள உயர்வு இம்முறை கிடைத்திருப்பதால் இது ஒரு பாரிய வெற்றி என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிக்கின்றது.
கடந்த 3 மாதங்களாக சம்பளம் தொடர்பில் பேச்சுவார்த்தைக்காக அணியப்பட்ட கறுப்பு ஆடை சம்பள உயர்வு வெற்றியின் பின் இன்று அகற்றப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் சம்பளம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடாகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த ஊடாகவியலாளர் சந்திப்பு நேற்று (26) கொட்டகலை சீ.எல்.எப் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, 500 ரூபாய் அடிப்படை சம்பளமாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் இம்முறை புதிய கூட்டு ஒப்பந்தத்தில் 200 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 40 வீத சம்பள உயர்வுடன் 700 ரூபாய் அடிப்படை சம்பளம் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன் மேலும் ஒரு கொடுப்பனவாக 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 750 ரூபாய் ஒரு நாள் சம்பளமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


