இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கு இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சத்து

25859 0

இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே ஐந்து புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்திடப்பட்டன. 

பிலிப்பைன்ஸுக்கான நான்கு நாள் அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட்கும் (Rodrigo Duterte) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (16) பிற்பகல் அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து அரச தலைவர்கள் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. 

முதலாவதாக இரு நாடுகளுக்குமிடையே பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு திணைக்களத்தின் செயலாளர் Delfin N.Lorenzana மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். 

அதனைத் தொடர்ந்து கைச்சாத்திடப்பட்ட இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான சுற்றுலாத் துறையினை மேம்படுத்துதல் பற்றிய உடன்படிக்கையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் சுற்றுலாத்துறை திணைக்களத்தின் செயலாளர் Bernadette Romula Puyat மற்றும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோர் கைச்சாத்திட்டனர். 

அடுத்ததாக இரு நாடுகளுக்கும் இடையிலான விவசாயத் துறையின் ஒத்துழைப்புகளை மேம்படுத்துதல் பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அதேவேளை, பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டின் விவசாய திணைக்களத்தின் உதவிச் செயலாளர் Waldo Carpro கைச்சாத்திட்டார். 

விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அமைச்சராக மைத்ரிபால சிறிசேன 2008ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அப்போதைய விவசாயத் துறை செயலாளருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பெறுபேறாக இன்று ஜனாதிபதியாக அவரது முன்னிலையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமை விசேட அம்சமாகும். 

அதன் பின்னர் கல்வித் துறையை மேம்படுத்துதல் பற்றிய புதிய புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பிலிப்பைன்ஸுக்கான இலங்கைத் தூதுவர் அருணி ரணராஜா கைச்சாத்திட்டதுடன், பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டின் உயர்கல்வி ஆணைக்குழுவின் பேராசிரியர் E.De Vera கைச்சாத்திட்டார். 

இலங்கையின் விவசாய ஆராய்ச்சி கொள்கைகள் சபைக்கும் பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான விவசாய தொழிநுட்ப ஒத்துழைப்பு பற்றிய உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது. தேசிய விவசாய ஆராய்ச்சி கட்டமைப்பின் விஞ்ஞானிகளுக்கு பட்டப்பின் படிப்பு பாடநெறிக்களுக்கான வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும். இலங்கை அரசாங்கம் சார்பில் பிலிப்பைன்ஸுக்கான இலங்கைத் தூதுவர் அருணி ரணராஜா கைச்சாத்திட்டதுடன், பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் சார்பில் லொஸ் பானோஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி Fernando C.Sanchez இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். 

Leave a comment