கோத்தாவிற்கு தயாசிறி பதிலடி!

232 0

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவது அரசியல் ஆசையுள்ள ஒவ்வொருவருக்கும் கனவாக இருக்கலாம். அதனை அவர்கள் வெளிப்படையாகவும் தெரிவிப்பார்கள்.

எனினும் அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினுடைய பெயரை அவர்கள் பயன்படுத்தினால் அதற்கு எம்மால் பொறுப்புக் கூற முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயளாலர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

கடந்த சனிக்கிழமை வியத்மக அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்திருந்த முன்னாள் பாதுகாப்புச் செயளாலர் கோத்தாபய ராஜபக்ஷ தான் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயார் எனவும், அதற்கு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஆதரவு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இது குறித்து வினவிய போதே தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், 

ஜனாதிபதி வேட்பாளர் குறித்த கனவு ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன என அனைத்து கட்சிகளிலுமுள்ள சிலரிடம் காணப்படுகின்றது. 

அததற்காக அவர்கள் அனைவரையும் வேட்பாளராக களமிறக்க முடியாது. கட்சி ரீதியாக கலந்தாலோசித்து அதன்படியே தீர்மானங்களை எடுக்க முடியும். மாறாக தனிப்பட்டவர்களின் விருப்புக்களினடிப்படையில் செயற்பட முடியாது. 

அத்தோடு ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியினுடைய வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை களமிறக்குவதில் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் உறுதியாக உள்ளோம். எனினும் ஜனாதிபதி இன்னும் இது தொடர்பில் தனது தனிப்பட்ட கருத்தினை தெரிவிக்கவில்லை. கூட்டணி அமைத்தாலும் தனித்து போட்டியிட்டாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வேட்பாளர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment