பாரிய கூட்டணி அமைத்து தேர்தலுக்கு முகம்கொடுக்க தயாராகி வருகின்றோம். அதற்காக தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றோம். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பு குழுக்கள் அனைத்தையும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் இடம்பெற இருக்கும் தேர்தல்களுக்கு முகம்கொடுக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் தேர்தல்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எவ்வாறு முகம்கொடுப்பது தொடர்பான தீர்மானங்களை நாளை இடம்பெற இருக்கும் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஆராய இருப்பதுடன் கட்சியின் மறு சீரமைப்பு தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க இருக்கின்றது.
அத்துடன் எமது கூட்டணியில் இணைந்துகொள்ளுமாறு தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றோம். எதிர்காலத்தில் அவர்களின் நிலைப்பாட்டை அவர்கள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கை நாட்டின் பொருளாதாரத்துக்கு பொருத்தமில்லை. எமது வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பதற்கு இடமளிக்க முடியாது என்றார்.


