சகல சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளின் நடைமுறைச் சாத்திய ஆய்வுகளும் மீளாய்வு

224 0

சகல உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட்டிருந்த நடைமுறைச்சாத்திய ஆய்வுகளையும் வர்த்தக திணைக்களத்தில் உள்ள சர்வதேச வர்த்தகத்துறை நிபுணர்களின் உதவியுடன் மீளாய்வு செய்வதற்கு அபிவிருத்தி தந்திரோபாயங்கள் மற்றும் தீர்மானித்திருக்கிறது.

கடந்த வருடம் கைச்சாத்திடப்பட்ட இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மீது தெரிவிக்கப்பட்ட கடுமையான விமர்சனங்களை அடுத்தே இந் தீர்மானத்துக்கு அமைச்சு வந்திருக்கிறது.

எதிர்காலத்தில் கைச்சாத்திடப்படக்கூடிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் மூலமாக உச்சபட்ச பயன்களை இலங்கை பெறுவதை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை, தேசிய பொருளாதாரத்துக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் நோக்கிலேயே இந்த முன்முயற்சியில் இறங்கியிருப்பதாக அமைச்சின் செயலாளர் எஸ்.ரி. கொடிக்கார ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

‘சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளில் பிரவேசிப்பதற்கு முன்னதாக நடைமுறைச்சாத்தியப்பாட்டு ஆய்வுகளை மீளாய்வுசெய்ய நாம் தீர்மானித்திருக்கின்றோம். அது அமைச்சின் புதியதொரு முயற்சி’ என்று அவர் சொன்னார்.

வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை வகுப்பதிலும்  ஒருங்கிணைப்பு மற்றும் நடைமுறைப்படுத்தலுடன் சம்பந்தப்பட்ட சகல விவகாரங்களிலும் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனம் என்ற வகையில் வர்த்தகத் திணைக்களம் எதிர்காலத்தில்  சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளைச்  செய்துகொள்ளும் பணிகளின்போது கூடுதல் ஈடுபாட்டைக்கொண்டிருக்கும். 

இந்தியாவுடனான உத்தேச பொருளாதார மற்றும தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையினால் இலங்கைக்கு கிடைக்கக்கூடிய பயன்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்கான பொறுப்பு சர்வதேச வர்த்தகத்துறை நிபுணர்கள் பலரிடம்  ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்றும் கொடிக்கார கூறினார்.

இது இவ்வாறிருக்க, இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் சாதக பாதகங்களை ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அண்மையில்  நியமிக்கப்பட்ட  நிபுணர்கள் குழு சமர்ப்பித்திருக்கும் அறிக்கையை பரிசீலனை செய்வதற்கு மூன்று பேரைக்கொண்ட நிபுணர் குழுவை அபிவிருத்தி தந்திரோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம நியமித்திருக்கிறார்.

சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஆராய்ந்த பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஸ்மன் தலைமையிலான 5 உறுப்பினர்களைக் கொண்ட குழு டிசம்பர் 10 அதன் அறிக்கையை ஜனாதிபதி சிறிசேனவிடம் கையளித்தது. ஆனால், அந்த அறிக்கை தங்களுக்கு இன்னமும் உத்தியோகபூர்வமாகக் கிடைக்கவில்லை என்றாலும் அதை பரிசீலனை செய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தையும் அபிவிருத்தி தந்திரோபாயக் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சையும் சேர்ந்த அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவை அமைச்சர் சமரவிக்கிரம நியமித்திருக்கிறார் என்று கொடிக்கார கூறினார்.

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மீளாய்வு செய்யவேண்டும் அல்லது முற்றாக ஒழிக்கவேண்டும் என்பதால் அதை தற்காலிகமாக இடைநிறுத்தவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் அமைச்சரவை உறுப்பினர்களிடமும் கேட்டிருப்பதாகவும் கொடிக்கார குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a comment