உயர்நீதிமன்றம் நிராகரித்தாலும் இலக்கை அடைய மாற்றுவழி உண்டு – டலஸ்

239 0

நாட்டு மக்களின் எண்ணம் மற்றும் விருப்பம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்காகவே பொதுத்தேர்தல் ஒன்றைக் கோரியிருந்தோம்.

எனினும் மக்களின் வாக்களிக்கும் உரிமையை மறுக்கும் வகையில் உயர்நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு நாங்கள் மதிப்பளிக்கின்றோம். அதேவேளை உயர்நீதிமன்றத்தினால் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தல் ஒன்றை நடாத்துவது ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் கூட, பொதுத்தேர்தலை நடத்துவதற்கான வேறுபல வழிமுறைகள் உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டத்திற்குப் புறம்பானது என்ற தீர்ப்பு உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் மஹிந்த அணியினர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

ஜனநாயகம் என்ற சொல்லிற்கு மேற்குலக நாடுகள் வேறு ஏதேனும் அர்த்தங்களைக் கொண்டிருக்கலாம். எனினும் தேர்தல் ஊடாகவே மக்களின் ஜனநாயகம் நிறுவப்படும் என்பதே எமது நிலைப்பாடாகும். எனவே பொதுத்தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்பதே தற்போதும் எமது கோரிக்கையாக உள்ளது. தேர்தல் ஒன்றிற்கான அவசியம் தொடர்பில் மக்களை விழிப்பூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.

Leave a comment