ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரினால் எமக்கு எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லையெனவும், எமது நாட்டைப் பார்க்க நாமே இருக்கின்றோம் எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்று (04) நடைபெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதில் கருத்து முரண்பாடுகள் இல்லை. இதற்கான சிறந்த வழியாக மக்களிடம் அரசியல் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பை விடுவதையே நான் காண்கின்றேன்.
19 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் விளைவுகளையே நாம் இப்போது அனுபவிக்கின்றோம். எமது நாட்டில் இதற்கு முன்னர் இவ்வாறான ஒரு நிலைமை இருக்கவில்லை. சிலருடைய நலன்களுக்காக ஏற்படுத்தப்பட்டவையே இவையாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

