இடைக்கால அரசாங்கம் அமைத்து நாட்டின் பிரதான இரண்டு கட்சிகளுக்கும் அதிகாரங்களை பகிர்ந்துகொண்டு தேர்தலுக்கு செல்லவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் பாராளுமன்றத்தில் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேகருத்தையே மூன்று பிரதான பௌத்த பீடங்களும் ஏற்கனவே முன்வைத்திருந்தன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தனவும் இக்கருத்தை வலியுறுத்தியிருந்தார். எந்தவித நிபந்தனையும் இன்றி இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க ஆதரவு வழங்க தயார் எனவும் அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அறிவித்திருந்தார்.
இந்நாட்டு அரசியலில் சிறுபான்மைக் கட்சிகளின் செல்வாக்கை ஏற்காத கடும்போக்கு அமைப்புக்கள் கடந்த காலங்களில் பகிரங்கமாக முன்வைத்து வந்த கருத்துக்களை அடக்கி வாசிக்கும் போக்கே இந்த பிரதான கட்சிகளுக்கான இடைக்கால அரசாங்க அழைப்பாகும் என்றால் அது பிழையாகாது.

