முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்படவில்லை

304 0

sunantha-ranashinga-720x480முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்படவில்லையெனவும், அப்படி உங்களுக்குச் சந்தேகமிருந்தால் நீங்கள் பரிசோதனை நடாத்திப்பார்க்கலாம் எனவும் மேஜர் ஜெனரல் சுனந்த ரணங்சிங்க தெரிவித்துள்ளார்.

முப்படைகளினதும் கூட்டுப்படை ஒத்திகை இன்று (புதன்கிழமை) திருகோணமலை மாவட்டத்திலுள்ள அரிசி மலைக் கடற்கரைப்பிரதேசத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டபோது அந்த முகாம்களுக்குப் பொறுப்பாகவிருந்த மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்கவிடம் அங்கிருந்த ஊடகவியலாளர்கள் முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பாக வினவினர். இதற்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தெரிவிக்கையில், ‘விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டது. அந்த புனர்வாழ்வு மையத்தினை நானே பொறுப்பேற்றிருந்தேன். எனது கண்காணிப்பின் கீழ் சகலருக்கும் புனர்வாழ்வு வழங்கப்பட்டது. இதன்போது எவருக்கும் விஷ ஊசியோ, வேறு ஏதும் மாற்று சிகிச்சைகளோ வழங்கப்படவில்லை.

அங்கு என்ன நடந்ததென்பது தொடர்பாக எனக்கு முழுமையாகத் தெரியும், அங்கு எவருக்கும் விச ஊசி ஏற்றப்படவில்லை என்பதை நான் உறுதியாகக் கூறிவேன்.

இந்த புனர்வாழ்வு மையத்தினை சர்வதேச அமைப்புக்களுடன் ஒன்றிணைந்தே நாம் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கினோம். ஆனால் நடைபெறாத ஒன்றிற்கு இராணுவத்தினர்மீது குற்றம் சுமத்துகின்றனர்.

அப்படி விச ஊசி ஏற்றப்பட்டது என நீங்கள் நம்பினால் அவர்களுக்குப் பரிசோதனை செய்து பாருங்கள். அதற்கு நாம் தடைசெய்யவில்லை. பரிசோதனையின் முடிவில் உண்மையைப் புரிந்துகொள்வீர்கள்.